சிறிது காலத்துக்கு முன், மறுபிறப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காகச் சில மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் ஆகியோர் எங்கள் சொந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தோம். இடையிடையே எமது ஆராய்ச்சிகளைப் பற்றிய விஷயங்களை எமக்குள் பரிமாறிக் கொள்வோம். கடைசியாக ஒரு நாள் அதைப் பற்றிக் கலந்துரையாட எங்களில் சிலர் ஒரு மண்டபத்தில் கூடினோம். அன்று பார்வையாளர்களில் யாரேனும் ஒருவரை மேடையில் வைத்துப் பாஸ்ட் லைஃப் ரிக்றெஷன் (past-life regression) எனப்படும் ஹிப்னாடைஸ் செய்வதன் மூலம் அவரின் குழந்தைப் பருவ நினைவுகள், பிறக்கும் நேரம், தாயின் வயிற்றில் இருக்கும் காலம் எனப்படிப்படியாகக் கொண்டு சென்று அவரின் முந்தைய பிறவிக்குக் கொண்டு செல்லும் முறையைச் செய்வோமா என ஆலோசித்தோம். எனது சகாக்கள் தயங்கினர். சரி வந்தால் நல்லது; வராவிட்டால் பரவாயில்லை; ஆனால் முயற்சி செய்யாமல் முடிவு செய்ய இயலாது தானே என்பது தான் எனது எண்ணம். ஒரு சிலர் தாமே வலிய முன் வந்தனர். அவர்களுள் மறுபிறவி என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் என்பதாக அபிப்பிராயமுள்ள ஒரு அழகான இளம் வாலிபனை நான் தேர்ந்தெடுத்தேன். சிலவேளை அது உண்மையாக இருந்தாலும் என்பதால் எமது உரையாடல்களைப் பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனை ஹிப்னடைஸ் செய்யும் முன்பாக அவனிடம் அவனுக்கு ஏதாவது உடல் ரீதியான அல்லது மனரீதியான பிரச்சனைகள் அல்லது ஏதாவது விளக்க முடியாத பயங்கள் உள்ளனவா எனக் கேட்டேன். அவன் தனது வலது பாதத்தில் டாக்டர்களாலும் குணப்படுத்த முடியாமல் நெடு நாட்களாக இருக்கும் ஒரு வலியைப் பற்றிச் சொன்னான். அத்துடன், என்ன தான் வாழ்வில் தான் வெற்றிகரமாக வந்தாலும் அல்லது மற்றையவர்களுக்குப் பிடித்த மாதிரித் தான் இருக்க முயன்றாலும் மற்றையவர்கள் தன்னைக் குறைவாக மதிப்பிட்டுத் தனக்குப் பின்னால் தன்னைப் பற்றிப் பேசிச் சிரிப்பார்களோ என்ற ஒரு பயம் தனக்கு வெகுநாட்களாக இருப்பதை ஒத்துக்கொண்டான்.
அவன் சரியான பொருத்தமான ஆளாகத்தான் தெரிந்தான். அதாவது பெரும் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல், அதே நேரம் எமது முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு ஆள் என்பதால் பொருத்தமாக இருந்தான்.
பார்வையாளர்களுக்கு இம்முறையானது எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்டுமுகமாகவும், நான் அவனது மனதில் ஒன்றையும் திணிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் முகமாகவும், அத்துடன் அவனை ஆசுவாசப்படுத்து முகமாகவும் அவனைத் தளர்வாக அமரவைத்து ஹிப்னாடைஸ் மூலம் அவனைப் படிப்படியாகப் பின்னோக்கி அழைத்துச் சென்றேன். அவனது குழந்தைப்பருவம், அவனது பிறப்பு, தாயின் வயிற்றில் அவன் கருத்தரிக்கும் நேரம், இந்தப் பிறவிக்கு முந்தைய பிறவியில் அவனது இறப்பு எனப் படிப்படியாக அவனை அவனது வாழ்க்கைப் பயணத்தின் பின் புறமாக மிகப் பொறுமையுடன் அழைத்துச் சென்றேன்.
பின்னர் நான் அமைதியாக இருக்க, என்னிடமிருந்து எந்தவிதமானதொரு வழிகாட்டலுமின்றி அவனது வலது காலானது ஊனமுற்ற கால்போல உள்முகமாகத் திரும்பிக் கொண்டதையும் அவனது போக்கானது தன்னம்பிக்கையுள்ள இளைஞன் போன்ற போக்கிலிருந்து ஒரு தன்னம்பிக்கையற்ற எதற்கும் வெட்கப்படக்கூடிய ஒருவனின் போக்காக மாறிக்கொண்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இப்போ நான் அவனிடம் இன்றைய திகதி என்ன எனக் கேட்டேன். அவன் 1821 ஆம் ஆண்டின் ஒரு திகதியைச் சொன்னான். அதாவது 154 வருடங்களுக்கு முன். அவன் மேடைக்கு வரும் போது சொன்ன பெயரை விட வேறு ஒரு பெயரைத் தன் பெயராகச் சொன்னான். அத்துடன் அவனைப் பொறுத்தளவில் நாம் அப்போ இருப்பது வேர்ஜீனியாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் தான் என்று சொன்னான். ஆனால் நாம் அப்போ இருந்தது கலிஃபோர்னியா மாநிலத்தின் வடக்கில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் ஆகும். அவனது அந்தச் சிறிய வாழ்க்கையானது பெற்றோர்க்குச் சங்கடமான ஒரு சுமையாகவும் அவனது வகுப்பினர்களின் பரிகாசத்துக்கும் கிண்டலுக்கும் இடமான தனிமையான வாழ்க்கையாக இருந்துள்ளது.
சிறிது காலத்தின் பின்னர் அக்குறிப்பிட்ட இளைஞனைச் சந்தித்த போது அவன் தனக்கு அதன்பின்னர் அந்தப் பாதத்தில் ஒரு நாளும் வலி வந்ததில்லை என்று தெரிவித்தான். அத்துடன் மற்றவர்கள் கேலிசெய்வதைப் பற்றி இப்போ தான் ஒரு போதும் வருந்துவதில்லை என்பதையும் தெரிவித்தான்.
மறுபிறப்பானது ஆத்மாவின் முடிவற்ற பயணத்துக்கான ஆண்டவனின் சரியான, அன்பான, கனிவான திட்டமாகும். மறுபிறப்பென்பதை சும்மா நம்புவது மட்டும் எனது எண்ணமில்லை. அதனை நம்பாமல் இருக்க முடியாதவாறு மிக மிக அதிகமான ஆதாரங்கள் உள்ளன.
