OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY
- From: Friendship with God

எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Monday, March 27, 2023

சில்வியா ப்ரௌன் என்பவரின் 'வாழ்வின் மறுபக்கம்' என்ற நூலில் இருந்து... (தமிழாக்கம்)



சிறிது காலத்துக்கு முன், மறுபிறப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காகச் சில மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் ஆகியோர் எங்கள் சொந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தோம். இடையிடையே எமது ஆராய்ச்சிகளைப் பற்றிய விஷயங்களை எமக்குள் பரிமாறிக் கொள்வோம். கடைசியாக ஒரு நாள் அதைப் பற்றிக் கலந்துரையாட  எங்களில் சிலர் ஒரு மண்டபத்தில் கூடினோம். அன்று பார்வையாளர்களில் யாரேனும் ஒருவரை மேடையில் வைத்துப் பாஸ்ட் லைஃப் ரிக்றெஷன் (past-life regression) எனப்படும் ஹிப்னாடைஸ் செய்வதன் மூலம் அவரின் குழந்தைப் பருவ நினைவுகள், பிறக்கும் நேரம், தாயின் வயிற்றில் இருக்கும் காலம் எனப்படிப்படியாகக் கொண்டு சென்று அவரின் முந்தைய பிறவிக்குக் கொண்டு செல்லும் முறையைச் செய்வோமா என ஆலோசித்தோம். எனது சகாக்கள் தயங்கினர். சரி வந்தால் நல்லது; வராவிட்டால் பரவாயில்லை; ஆனால் முயற்சி செய்யாமல் முடிவு செய்ய இயலாது தானே என்பது தான் எனது எண்ணம். ஒரு சிலர் தாமே வலிய முன் வந்தனர். அவர்களுள் மறுபிறவி என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் என்பதாக அபிப்பிராயமுள்ள ஒரு அழகான இளம் வாலிபனை நான் தேர்ந்தெடுத்தேன். சிலவேளை அது உண்மையாக இருந்தாலும் என்பதால் எமது உரையாடல்களைப் பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.                          
அவனை ஹிப்னடைஸ் செய்யும் முன்பாக அவனிடம் அவனுக்கு ஏதாவது உடல் ரீதியான அல்லது மனரீதியான பிரச்சனைகள் அல்லது ஏதாவது விளக்க முடியாத பயங்கள் உள்ளனவா எனக் கேட்டேன். அவன் தனது வலது பாதத்தில் டாக்டர்களாலும் குணப்படுத்த முடியாமல் நெடு நாட்களாக இருக்கும் ஒரு வலியைப் பற்றிச் சொன்னான். அத்துடன், என்ன தான் வாழ்வில் தான் வெற்றிகரமாக வந்தாலும் அல்லது மற்றையவர்களுக்குப் பிடித்த மாதிரித் தான் இருக்க முயன்றாலும் மற்றையவர்கள் தன்னைக் குறைவாக மதிப்பிட்டுத் தனக்குப் பின்னால் தன்னைப் பற்றிப் பேசிச் சிரிப்பார்களோ என்ற ஒரு பயம் தனக்கு வெகுநாட்களாக இருப்பதை ஒத்துக்கொண்டான்.   
அவன் சரியான பொருத்தமான ஆளாகத்தான் தெரிந்தான். அதாவது பெரும் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல், அதே நேரம் எமது முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு ஆள் என்பதால் பொருத்தமாக இருந்தான்.
பார்வையாளர்களுக்கு இம்முறையானது எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்டுமுகமாகவும், நான் அவனது மனதில் ஒன்றையும் திணிக்கவில்லை என்பதை நிரூபிக்கும் முகமாகவும், அத்துடன்  அவனை ஆசுவாசப்படுத்து முகமாகவும் அவனைத் தளர்வாக அமரவைத்து ஹிப்னாடைஸ் மூலம் அவனைப் படிப்படியாகப் பின்னோக்கி அழைத்துச் சென்றேன். அவனது குழந்தைப்பருவம், அவனது பிறப்பு, தாயின் வயிற்றில் அவன் கருத்தரிக்கும் நேரம், இந்தப் பிறவிக்கு முந்தைய பிறவியில் அவனது இறப்பு எனப் படிப்படியாக அவனை அவனது வாழ்க்கைப் பயணத்தின் பின் புறமாக மிகப் பொறுமையுடன் அழைத்துச் சென்றேன்.
பின்னர் நான் அமைதியாக இருக்க, என்னிடமிருந்து எந்தவிதமானதொரு வழிகாட்டலுமின்றி அவனது வலது காலானது ஊனமுற்ற கால்போல உள்முகமாகத் திரும்பிக் கொண்டதையும் அவனது போக்கானது தன்னம்பிக்கையுள்ள இளைஞன் போன்ற போக்கிலிருந்து ஒரு தன்னம்பிக்கையற்ற எதற்கும் வெட்கப்படக்கூடிய ஒருவனின் போக்காக மாறிக்கொண்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இப்போ நான் அவனிடம் இன்றைய திகதி என்ன எனக் கேட்டேன். அவன் 1821 ஆம் ஆண்டின் ஒரு திகதியைச் சொன்னான். அதாவது 154 வருடங்களுக்கு முன். அவன் மேடைக்கு வரும் போது சொன்ன பெயரை விட வேறு ஒரு பெயரைத் தன் பெயராகச் சொன்னான். அத்துடன் அவனைப் பொறுத்தளவில் நாம் அப்போ இருப்பது வேர்ஜீனியாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் தான் என்று சொன்னான். ஆனால் நாம் அப்போ இருந்தது கலிஃபோர்னியா மாநிலத்தின் வடக்கில் உள்ள ஒரு பெரிய நகரத்தில் ஆகும். அவனது அந்தச் சிறிய வாழ்க்கையானது பெற்றோர்க்குச் சங்கடமான ஒரு சுமையாகவும் அவனது வகுப்பினர்களின் பரிகாசத்துக்கும் கிண்டலுக்கும் இடமான தனிமையான வாழ்க்கையாக இருந்துள்ளது. 
சிறிது காலத்தின் பின்னர் அக்குறிப்பிட்ட இளைஞனைச் சந்தித்த போது அவன் தனக்கு அதன்பின்னர் அந்தப் பாதத்தில் ஒரு நாளும் வலி வந்ததில்லை என்று தெரிவித்தான். அத்துடன் மற்றவர்கள் கேலிசெய்வதைப் பற்றி இப்போ தான் ஒரு போதும் வருந்துவதில்லை என்பதையும் தெரிவித்தான்.                         
மறுபிறப்பானது ஆத்மாவின் முடிவற்ற பயணத்துக்கான ஆண்டவனின் சரியான, அன்பான, கனிவான திட்டமாகும். மறுபிறப்பென்பதை சும்மா நம்புவது மட்டும் எனது எண்ணமில்லை. அதனை நம்பாமல் இருக்க முடியாதவாறு மிக மிக அதிகமான ஆதாரங்கள் உள்ளன.    

Tuesday, April 13, 2021

நீல் டொனால்ட் வோல்ஷ் என்பவரின் 'இறைவனுடன் ஏற்படும் தோழமை' எனும் நூலிலிருந்து....(தமிழாக்கம்)

 


இறைவன்: உனது இதயம் காட்டும் பாதையில் நீ எனை நோக்கி வா. உனது அறிவு காட்டும் வழியிலல்ல. உனது அறிவால் எனை நீ உணர முடியாது. 

From: Friendship with God by Neale Donald Walsch


Monday, August 31, 2020

ஏன் இவ்வுலகில் இவ்வளவு மதக்கலவரங்கள்?

இந்த சிந்தனை எழுதப்பட்டது 2019 மே மாதம் 7 ஆம் திகதி:
எனக்கு நினைவிருக்கிறது சரித்திரம் படிக்கும் போது சிலுவை யுத்தம் பற்றிப் படித்தது. அத்துடன் ஏதோ ஒரு யுத்தத்தின் போது வாட்களில் பன்றியின் கொழுப்புப் பூசப்பட்டுள்ளது என்று ஒரு வதந்தி பரவி அதன் மூலம் இஸ்லாமியர்கள் கொதித்தெழுந்து அதனால் ஒரு கலவரம் மூண்டதென்றும் படித்த ஞாபகம். இப்போ இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமொன்று பல இடங்களிற் குண்டு வைத்து அங்கு ஒரே பதட்டமான நிலைமையாக உள்ளது.  அது தான் என்னை சிந்திக்கத் தூண்டியது. அத்துடன் நான் மற்றைய மதங்களைப் பொறுத்தவரை என்னை ஒரு பெருந்தன்மையானவளாக இவ்வளவு நாட்களும் எண்ணியிருந்தேன். ஆனால் ஓரிரு நாட்களின் முன்னர் தான் நானும் கூட ஏனைய மதங்களைப் பொறுத்த வரை ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்திருப்பதை அறிந்து வெட்கினேன். அப்போ தான் உண்மையில் தீவிரமாக இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்தித்தேன். எனது எண்ணத்தைச் சொல்கிறேன்.
அதாவது இறைவனிடமிருந்து நாம் பிரிந்து இப்பூவுலகில் பிறப்பெடுக்கும் போது மீண்டும் இறைவனிடம் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் தானே வருகிறோம். இங்கு வந்து வளர்ந்து எமக்கு அறிவு வருகையில் எமது பெற்றாரோ அல்லது ஆசிரியர்களோ எமக்கு மதங்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்போ நான் நினைக்கிறேன் இறைவனை மீண்டும் நாம் சென்றடைய வேண்டும் என்ற எமது உள்ளுணர்வின் நோக்கத்தால், 'ஓ இந்த வழியைப் பின் பற்றினால் நமது இறைவனை நாம் அடைய முடியும்' என எமது உள் மனம் நம்பத்தொடங்குகிறது. எமது பெற்றோரையே நாம் உலக விடயங்களுக்கும் நம்புவதால் இவ்விஷயத்திலும் அவர்களின் வழி காட்டலையே நம்பி அந்த வழிகளைப் பின்பற்றத் தொடங்குவோம். அப்போ ஒரு கட்டத்தில் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரை நாம் சந்திக்க வேண்டி வருகையில் எமது ஆத்மா அந்த வழி சரியா அல்லது எமது இந்த வழி சரியா என ஒரு கணம் தடுமாறும். அப்போ எமது வழிகாட்டிகளாக நாம் நினைப்பவர்கள் எமது வழி தான் சரியென எம்மை நம்பச் செய்வார்கள். என்றாலும் வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் தமது வழியே சரியென எம்மை மனம் மாற்ற முயற்சிக்கையில் சிலர் அதில் ஈடுபட்டு அவ்வழியைப் பின் பற்றத் தொடங்கலாம். மாறாதவர்கள் இந்த மதத்தில் நம்பிக்கை வைத்து அதன் வழியில் நடக்கலாம். அப்போ வேறு மதத்தவர்கள் தங்கள் மதத்தைப் பிரசாரம் செய்கையில் எமது வழி தான் சரியென எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்குக் கோவம் வரலாம். இதனாற் தான் உலகில் இவ்வளவு மதக்கலவரங்கள் உண்டாகிறது என நினைக்கிறேன்.
எனக்கு இப்போ நினைவு வருகிறது நான் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் போது என நினைக்கிறேன், எனது சிறிய வயது நண்பி போன்ற ஒரு பெண் எனக்கு எமது வகுப்பிலே இருந்த வேற்று மதத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று பெண்களைக் காட்டி அவர்கள் எங்கள் சமயமல்ல மற்றைய சமயம் என்று பிரித்துக் காட்டியது. அப்போ நான் நினைத்தேன் ஓ அவர்கள் எங்களைப் போன்றவர்கள் அல்ல என. அப்போது தான் என் மனதில் வேறுபாடு விதைக்கப்பட்டது. எனக்குச் சொன்ன அச்சிறுமிக்கு அவளின் பெற்றார் அல்லது மூத்த சகோதரர்கள் யாராவது சொல்லியிருக்கலாம்.
இந்த மதக்கலவரங்களோ அன்றி மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளோ இன்று நேற்றுத் தொடங்கவில்லையே. அவை காலகாலத்துக்கும் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கின்றன. ஒவ்வொரு மதத்திற்கும் அந்த அந்த மதத்திற்குரிய மதத்தலைவர்களோ வழிகாட்டிகளோ குருமார்களோ இருப்பார்கள் தானே. பெரும் பாலும் அவர்களின் வாழ்க்கையே அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அளிக்கும் பணமோ பொருளோ அவற்றில் தான் தங்கியுள்ளது. அப்போ அவர்கள் அம்மதத்தைப் பின் பற்றுபவர்களை இழக்க எந்த நேரத்திலும் விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் தங்கள் வழி தான் சரியென்று எந்த நேரமும் பின் பற்றுபவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும். தங்கள் வழி தான் சரியென்று வலியுறுத்துகையில் மற்றைய மதங்கள் சரியில்லையென்பது சொல்லாமலே சொல்லப்படுகிறது. படிப்படியாக மதத்தின் மீது உள்ள ஈடுபாடு மதவெறியாக மாற்றப்படுகிறது.  

Thursday, January 23, 2014

விஷ்ணுபுரம் என்ற நூலிலிருந்து எடுத்தவை...................

"பிரபஞ்ச இயக்கம் மூன்று குணங்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள் இவை. இவை ஆதிப்பிரகிருதியிலும் இருந்தே ஆக வேண்டும். இந்த இயக்கமுள்ள இயற்கையில் இக்குணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பிணைந்து, பலகோடி உருவங்களையும், செயல்களையும் உருவாக்கியபடி உள்ளன. அப்படியானால் இயக்கமற்ற ஆதி இயற்கையில் இவை பரஸ்பரம் பூர்த்தி செய்தபடி, சமநிலையில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சமநிலையே அதை மகாமௌனத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அநாதி காலத்தில் அது அசைவற்ற பெரும் இருப்பாக உறைந்திருக்க வேண்டும். என்றோ, ஏதோ ஒரு கணத்தில், ஒரு முதல் தொடக்கம் நிகழ்ந்திருக்கலாம். அதன் மூலம் முக்குணங்களின் சமநிலை குலைந்து, முதல் சலனம் தொடங்கியிருக்கலாம். சலனத்திலிருந்து சலனங்களின் பெருக்கம் தோன்றியது; சலனமே வடிவான இப்பிரபஞ்சம் உருவாகியது என்று நாங்கள் கூறுகிறோம். முக்குணங்களும் கலந்து கலந்து, மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் முழுச்சமநிலையை அடையும். அன்று மீண்டும் இயற்கை தனது ஆதிமகாமௌனத்துக்குத் திரும்பும்."

Thursday, November 14, 2013

விஷ்ணுபுரம் என்ற நூலிலிருந்து எடுத்தவை...................

புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்குக் காட்டுவது வேறு காடு. மின்னலின் கணநேரம்தான் நமக்கு நிலைத்த காட்சியெனும் பிரமையை அளிக்கிறது.


Saturday, October 26, 2013

விஷ்ணுபுரம் என்ற நூலிலிருந்து எடுத்தவை


கேள் பிட்சுவே, திரை விலகுவதற்கு முன் இந்த வெற்று நாடக மேடையில் நிரம்பியிருப்பது என்ன?
புனையப்படாத வேடங்களின், நடிக்கப்படாத உணர்வுகளின், உருப்பெறாத உறவாடல்களின் நிகழாத நாடகம். நிகழ்கையில் இது பிறிதொரு மேடையின் அணியறையாகும்.
கேள் பிட்சுவே, அணியறையில் இப்போ மனிதர்களுக்கு பெயர்கள் தரப்படுகின்றன. முகங்கள் சூட்டப்படுகின்றன. கதையொன்றின் சரடால் அவர்கள் பின்னி இணைக்கப்படுகிறார்கள்.
இந்த மேடையில் இன்மையின் திரை விலக்கி பிறந்து வருகின்றன கதா பாத்திரங்கள். முயங்கி விடுபட்டு அழுது சிரித்து இந்த சிறு வெளியில் தங்களை நிகழ்த்துகின்றன.
கேள் பிட்சுவே, ஒரு நடிகனில் இரு நடிகர்கள் வாழ்கிறார்கள். தாமஸன் தன்னை இருட்டுக்குள் ஒளித்துக் கொள்கிறான். தைஜசன் தன்னை ஒளியில் ஒளித்துக் கொள்கிறான்.
இருவரும் ஒருவர் பார்க்க ஒருவர் தங்கள் வேடத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணுள் உறங்கும் விதையிலிருந்து பெருமரம் போல இம்மேடையில் தளிர்விட்டு தழைத்து விழுதாடி பூத்து கனிந்து பழுத்து விதைகளாகிறார்கள்.
ஆகவே, பிட்சுவே, இது திரை தூக்கப்படும் கணம். இந்த வெறுமையில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்க.

(அத்யாரோப தர்மதரிசனம் : ஆதிப் பிரபஞ்சம் குணரூபங்களாக மாறிய வகை)